தொலைத்தொடர்பு பயிற்சி நிலையத்தில் (TTC) வாழ்க்கை வித்தியாசமானது. ஒரு சிறந்த பல்கலைக்கழக அனுபவத்தைத் தருவது அது. இங்கு வரும் மாணவர்கள் கல்வியைக் கற்பது மட்டுமன்றி, விளையாட்டு மற்றும் பிற நடவடிக்கைகளிலும் பங்குபெறும் வாய்ப்பைப் பெறுவார்கள். இது இவர்களின் உள்வயமான திறன்களை வளர்ப்பதற்கு உதவுகிறது. கல்விசார்பற்ற செயற்பாடுகளை ஒழுங்குசெய்தும் ஒருங்கிணைத்தும் நடத்துவதற்கு பல கழகங்கள், குழுக்கள் போன்றவையுள்ளன. இதைத்தவிர, அங்கே பாரிய விளையாட்டு மைதானமும், மாணவர்களை விளையாட்டு நடவடிக்கைகளில் பங்குபெறுவதற்கு ஊக்குவிக்கும்பொருட்டு உள்ளக விளையாட்டுப்பிரிவும் உள்ளது.
TTC இல் பல கழகங்களும் சங்கங்களும் சுறுசுறுப்பாக இயங்குகின்றன. 2 வருடகால கல்வியைத் தொடரும் BTEC, HND மாணவர்களே பெரும்பாலும் இவற்றை உருவாக்குவதற்கான முன் நடவடிக்கைகளை எடுக்கிறார்கள். ஆனபோதிலும், இக்கழகங்கள் ஏற்பாடு செய்யும் நிகழ்வுகளில் பிற மாணவர்களும் பங்கெடுக்கிறார்கள். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், வாகனம் கழுவுதல் போன்ற நிதி திரட்டும் நடவடிக்கைகள் போன்றவற்றையும் இவை ஏற்பாடு செய்கின்றன.
ஒவ்வொரு வருடமும் அந்தந்த ஆண்டு மாணவர்கள் சுற்றுலா செல்கிறார்கள். வருடாந்த ஒன்றுகூடல்கள், புதுமாணவர்களை வரவேற்றல் போன்றவற்றை ஒழுங்குசெய்வதிலும் தம்மை ஈடுபடுத்திக்கொள்கிறார்கள். மேலும், சமூக அபிவிருத்தி, இரத்த தானம் போன்ற பிற சமூக நடவடிக்கைகளிலும் இம்மாணவர்கள் தம்மை ஈடுபடுத்திக்கொள்கிறார்கள்.
எமது பயிற்சி நிலையத்தில் கல்விபயிலும்போது பலவகையான விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பங்கள் எமது மாணவர்களுக்கு கிடைக்கின்றது. இதனால் இவர்கள் கல்வியறிவுடன் விளையாட்டுக்களிலும் ஈடுபட்டுத் தமது ஓய்வு நேரங்களை நன்றாக அனுபவிக்கிறார்கள். ஓய்வு நேரத்தில் அவர்கள் சுதந்திரமாக விளையாட்டு மைதானத்தில் உலவலாம். துடுப்பாட்டம், வலைப்பந்தாட்டம், உதைபந்தாட்டம் போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுவார்கள். இதைத்தவிர, உள்ளக விளையாட்டுக்கூடங்களில் கரம், டேபிள் டெனிஸ் போன்ற விளையாட்டுக்களிலும் ஈடுபடுவர். வெலிசர மற்றும் மொரட்டுவ பயிற்சி நிலையங்களில் உள்ளக விளையாட்டு அறைகள் உள்ளன. வெலிசரவிலுள்ள, சகல் உபகரணங்களும் உள்ளடங்கிய உடற்பயிற்சிக்கூடத்தையும் இவர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
சகல விளையாட்டு நடவடிக்கைகளையும் கொண்டு நடத்துவது விளையாட்டுக்கழகமாகும். வருடாந்த விளையாட்டுப்போட்டிகள், கிரிக்கட் போட்டிகள் போன்றவற்றை நடத்துவதில் இக்கழகம் மாணவர்களுக்குத் துணையாகவிருந்து வழிகாட்டும்.